இந்த ஊரடங்குக் காலத்தில் வீட்டிலிருந்தபடி அலுவலக வேலைகளை மேற்கொள்வதென்பது உண்மையிலேயே கயிறு மீது நடப்பது போன்ற சவாலான ஒரு விஷயம் தான். இந்த சவாலை சரியாக எதிர்கொள்ள உதவும் உத்திகள் அறியலாமா?
- அலுவலக வேலைகளை வீட்டிலிருந்து மேற்கொள்கிறவர்கள் வாய்ப்பிருப்பின் தனியாக ஒரு அறையில் அமர்ந்தபடி வேலைகளை மேற்கொள்ளலாம். வீடு மிகச் சிறியது எனில் இருக்கின்ற இடத்தில் மேசை நாற்காலியைப் போட்டு அலுவலக வேலைகளை செய்வதற்கான குறைந்தபட்ச சூழலையாவது உருவாக்கி அலுவல்களை மேற்கொள்ளலாம்.
- குறிப்பாக உங்களது மேசையில் மடிக்கணினி, ஸ்மார்ட்போன், சார்ஜர், டைரி, பேனா போன்றவற்றை மறக்காமல் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீடு எப்போதும் சத்தமாகவே இருந்தால் அதிலிருந்து விடுபட்டு அலுவலக வேலைகளை மேற்கொள்ள noise cancellation headphone போன்றவற்றை பயன்படுத்தலாம். அதேபோல லேப்டாப்பில் வேலை செய்யும்போது அசௌகர்யமில்லாமல் பணியாற்ற மௌஸ் பயன்படுத்தலாம்.
- வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் நவீனத் தொழில்நுட்பத்தை திறம்படப் பயன்படுத்திக்கொள்வது சிறந்தது. குழுவாக வீடியோ கால் பேசும்போது “கூகிள் ஹேங்அவுட்ஸ்”( Google Hangouts), Zoom, Teams போன்றவற்றைப் பயன்படுத்தலாம். அதேபோல தினசரி அலுவலக வேலைகளைத் திறம்படச் செய்ய எண்ணற்ற செயலிகளும் கைகொடுக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தியும் அலுவலகப் பணிகளை செவ்வனே முடிக்கலாம்.
- வீட்டில் இருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொள்கிறீர்களா? அப்படியென்றால் மடிக்கணினி போன்ற உங்களது அலுவலக உபகரணங்களை ஒருபோதும் உங்கள் குழந்தைகளிடம் பயன்படுத்தக் கொடுக்காதீர்கள். குழந்தைகள் அதனை சரியாகக் கையாளாமல் உடைத்துவிட்டால் இந்த ஊரடங்குக் காலத்தில் இதனை சரிசெய்ய முடியாது. உங்களது அலுவலக வேலைகளும் அப்படியே நின்றுவிடும்.
- அதேபோல அலுவலக வேலைக்கு இடைவேளை எடுக்கிறீர்கள் என்றால் மடிக்கணினி மற்றும் அலுவலகக் கோப்புகள் போன்றவற்றை அப்படி அப்படியே போட்டுவிட்டுச் சென்றுவிடாதீர்கள். குழந்தைகள் அவற்றின் முக்கியத்துவத்தை உணராமல் விளையாட்டாக சேதப்படுத்தும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.
- சுறுசுறுப்பாக இயங்க வேண்டிய காலை நேரத்தில் தூங்கிய கண்களும், அழுக்கு உடையுமாக கணினி முன்பு அமருவதைத் தவிர்த்திடுங்கள். அலுவலகம் செல்வதற்கு வழக்கமாக எவ்விதம் தயாராவீர்களோ அதேபோல குளித்து, உடை மாற்றி, உணவருந்தி, பளிச்சென்று கணினி முன்பு அமருங்கள். புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். வேலையும் கடகடவென நடக்கும்.
- அலுவலக வேலைகளைத் திட்டமிடுங்கள். இது மிகவும் பழைய ஆலோசனை என்றாலும், இதுதான் சரியானதும் கூட. முதலில் எதைச் செய்யவேண்டும்? எது மிக அவசரம் என்பதற்கேற்ப வேலைகளைப் பிரித்துக் கொள்ளுங்கள். மொத்தமாக வைத்துக்கொண்டு விழி பிதுங்குவதைவிட திட்டமிட்டுச் செயல்பட்டால் வேலைப்பளு குறையும்.
- உடனே முடித்தாக வேண்டிய மிக முக்கிய வேலைகளை மேற்கொள்ளும்போது முடிந்தவரை அடிக்கடி இடைவேளை எடுத்துக் கொள்வதைத் தவிர்த்திடுங்கள். அதுபோன்ற சமயங்களில் நொறுக்குத்தீனி, பிளாஸ்க்கில் காபி போன்றவற்றை அருகிலேயே வைத்துக்கொள்ளுங்கள்.
- முக்கிய வேலைகளில் இருக்கும்போது புதிதாக வரும் மின்னஞ்சல்களைப் பார்ப்பது, குறுஞ்செய்திகளுக்குப் பதிலளிப்பது, அடிக்கடி கணினியை ஆப் செய்வது என்று இருக்கவேண்டாம். அதேபோல சிலர் “மல்ட்டி டாஸ்கிங்” செய்கிறேன் என்று ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்து எதையுமே சரியாக முடிக்கமாட்டார்கள். இதுபோன்ற வித்தைகளை மேற்கொள்ளாமல் ஒன்றை நன்றாய் முடிப்பது நலம்.
- வீட்டிலிருந்தபடியே அலுவலக வேலைகளை மேற்கொள்கிறவர்கள் தங்களது அலுவலக ஊழியர்களுடன் மிகச்சிறந்த தொடர்பில் எப்போதும் இருக்க வேண்டும். நீங்கள் வீட்டிலிருந்தபடி வேலை செய்வது(work from home) என்பதை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல், மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலை செய்கிறீர்கள் என்பது நீங்கள் அவர்களுடன் அதிகமாகத் தொடர்பில் இருக்கும்போதுதான் அவர்களுக்குத் தெரிய வரும்.
- பலமணிநேரப் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறி அலுவலகம் செல்ல வேண்டிய துயரம் தற்போது இல்லைதான். இதன்காரணமாக நிறைய நேரம் அலுவலகப் பணிகளைச் செய்யமுடியும் என்றாலும் வீட்டில் இருந்தபடி வேலை செய்வதும் அத்தனை சுலபமில்லை. குழந்தைகளின் கூச்சல்கள் , தேவையற்ற அலைபேசி அழைப்புகள், வாட்ஸ்-அப்பில் அடுத்தடுத்து வந்துவிழும் செய்திகள்....இப்படி வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் சந்திக்கின்ற தொந்தரவுகள் ஏராளம். இதிலிருந்து தப்பிக்க வேண்டுமா?
- அப்படியென்றால் வீட்டிலிருந்து வேலை செய்தாலும் அலுவலகத்தில் இருப்பதைப் போலக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அலுவலக வேலையில் இருக்கும்போது குடும்ப உறுப்பினர்களுடன் தேவையற்ற உரையாடலில் ஈடுபடாதீர்கள். தேவையற்ற தொலைபேசி அழைப்புகளை எடுக்காதீர்கள். கவனச்சிதறல்களைத் தவிர்க்க ஹெட்போன் பயன்படுத்துங்கள். முடிந்தால் TINTED EYE GLASSES போன்ற கண்ணாடிகளையும் பயன்படுத்தலாம். முகநூல் மற்றும் வாட்ஸ்-அப் போன்றவற்றிலிருந்து தப்பிக்க உங்களது தனிப்பட்ட ஸ்மார்ட் போனின் மொபைல் டேட்டாவை அணைத்து வையுங்கள்.
- கைக்குழந்தையை வைத்துக்கொண்டு வீட்டிலிருந்தபடி வேலை செய்யும் தாயா நீங்கள்? அப்படியென்றால் வேலை நிமித்தமாக கிளையன்ட்டுடன் நீங்கள் அலைபேசி அல்லது வீடியோகால் உரையாடலை ஆரம்பிக்கும்போதே உங்களுக்கு சின்னஞ்சிறு குழந்தை இருக்கிறது என்பதை தெரிவித்து விடுங்கள்.அப்போதுதான் திடீரென்று குழந்தை அழும்போதோ அல்லது சத்தமிடும்போதோ அதனை அவர்கள் இயல்பாக எடுத்துக்கொள்வார்கள். இதன்மூலம் உங்களுக்கும் தேவையற்ற தர்மசங்கடம் ஏற்படாது.
- குறிப்பாக நீங்கள் உயர் அதிகாரியாக இருப்பின் உங்கள் சின்னஞ்சிறு குழந்தை தூங்குகின்ற சமயத்தில் உங்களது அலுவலக ஊழியர்களுடன் கான்பிரன்ஸ் கால் போன்றவற்றைப் பேசலாம். ஆன்லைன் மீட்டிங்குகளை நடத்தலாம். இதன்மூலம் எந்தவிதத் தொந்தரவும் இல்லாமல் அலுவலகம் சார்ந்த மிக முக்கிய விஷயங்களை விவாதிக்க முடியும்.
- எல்லாவற்றுக்கும் மேலாக அலுவலக நேரத்தை வரையருங்கள். உங்களது தினசரி அலுவலக வேலைகளை நிறைவாகச் செய்துவிட்டீர்களா? அலுவலக நேரம் முடிந்துவிட்டதா? அலுவலக செட்டப்பை எடுத்து விடுங்கள். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருங்கள். பிடித்தமான செயல்களைச் செய்யுங்கள். குறிப்பாக பார்வையாளராக இல்லாமல் பங்கேற்பாளராக புதிய செயல்களில் ஈடுபடுங்கள். வீட்டு வேலைகளை எந்தவித ஈகோவுமின்றிச் செய்யுங்கள். அதைவிட்டுவிட்டு இருபத்திநான்கு மணிநேரமும் அலுவலக வேலைகளில் மட்டுமே ஈடுபட்டுக்கொண்டு வேலை போதையில் இருந்தால் உங்களுக்கு மட்டுமல்ல உங்களது குடும்பத்தாருக்கும் அது அலுப்பை உண்டாக்கிவிடும்.
- வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் இந்தக் காலகட்டத்தில் நேரம் நிறையக் கிடைக்கிறதே என்று நீங்கள் மாங்குமாங்கென்று அளவுக்கு மீறி வேலை செய்தால் இச்செயல் உங்களது நிறுவனத்திற்கு உங்கள் மீது ஒருவித மிகை எதிர்பார்ப்பை எற்படுத்திவிட்டுவிடும். அதன்பின்னர் இந்த ஊரடங்கு காலம் முடிந்து நீங்கள் அலுவலகத்துக்குச் செல்லும்போதும் இதே எதிர்பார்ப்பை உங்கள் மீது உங்களது நிறுவனம் தொடர்ந்து வைக்கும். அப்போது உங்களால் இதைப் பூர்த்தி செய்யமுடியாமல் போகும் பட்சத்தில் “ லாக் டவுன் காலத்துல இருந்த வேலை செயல்திறன் இப்போது உங்களிடம் இல்லை” என்கிற விமர்சனத்தை உங்களது அதிகாரி உங்கள் முன் வைப்பார். எனவே அலுவலக நேரத்தில் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலை செய்யுங்கள். அதன்பின்னர் அதிலிருந்து வெளியே வந்துவிடுங்கள். அதிகமாக வேலை செய்கிறேன் என்று எதையவது இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து ஆபத்தில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.
- மிகமிக முக்கியமான விஷயம்....உங்களது அலுவலகம் சார்ந்து இயங்கும் வாட்ஸ்-அப் குழுக்களில் கவனமுடன் பங்கெடுங்கள். குறிப்பாக “ஊரடங்கு சூழ்நிலை காரணமாக அந்த நிறுவனம் ஆட்குறைப்பு செய்கிறது. இந்த நிறுவனம் ஊதியத்தைப் பாதியாகக் குறைக்கிறது. அந்த நிறுவனம் மூடப்படப்போகிறதாம்” என்பதுபோன்ற தகவல்களை, செய்திகளை அவை உண்மையாகவே இருந்தாலும் பகிராதீர்கள். இதுபோன்ற பகிரல்கள் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்திற்கு உங்கள் மீது ஒருவித அதிருப்தியை ஏற்படுத்திவிடும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.