தலைப்பைக் கேட்டதும் ஆச்சர்யமாக இருக்கிறதா? அதுதான் உண்மை. இந்த லாக் டவுன் காலம் உலகப் பொருளாதாரத்தையே ஆட்டம் காணச் செய்துவிட்டது உண்மைதான் என்றாலும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்களின் தேவைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால் இந்தத் தேவைகள்தான் உங்களுக்கு வருமானத்தை ஈட்டித்தரப் போகின்றன.
1. வயதானோர் மட்டும் தனியாக வாழ்கின்ற வீடுகளில் அவர்களுக்கான மருந்துகளின் தேவை அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில் மருந்துக்கடைகளுக்குச் சென்று மருந்தை வாங்குவது என்பது அவர்களால் இயலாத காரியம். எனவே நீங்கள் வசிக்கின்ற பகுதியில் வாழ்கின்ற வயதானவர்களுக்கான மருந்துகள் மற்றும் அடல்ட் டயப்பர் போன்ற அவர்களுக்குத் தேவைப்படுகின்ற அவசரமான அத்தியாவசியப் பொருட்களை நீங்கள் மருந்தகங்களிலிருந்து வாங்கி வயதானவர்களின் வீடுகளில் நேரடியாக டெலிவரி செய்யலாம்.
2.வயதானவர்கள் மட்டுமல்லாமல் நீங்கள் வசிக்கின்ற பகுதியில் யார் யாருக்கெல்லாம் மருந்துகள் தேவைப்படுகிறதோ அவற்றை மருந்தகங்களிளிருந்து வாங்கி டோர் டெலிவரி செய்யலாம். இதற்கென குறிப்பிட்ட ஒரு தொகையை கட்டணமாக வசூலிக்கலாம். குறிப்பாக வாட்ஸ்-அப் குழு ஒன்றை உருவாக்கி உங்கள் பகுதியில் வசிப்பவர்களை அதில் சேர்த்துக்கொண்டு மேற்சொன்ன சேவையைத் தொடங்கலாம். இது போன்ற சேவையை மளிகை, காய்கறி, பழங்கள் என்று உங்கள் பகுதிவாசிகளின் தேவைகளுக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்தவும் செய்யலாம்.
ஆனால் ஒன்று..... நீங்கள் மற்றும் உங்களது குடும்பத்தினர் சளி, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் முழு ஆரோக்கியத்தோடு இருந்தால் மட்டும் மேற்சொன்னது போன்ற வேலையில் ஈடுபடுங்கள். குறிப்பாக முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைபிடிப்பது, கிருமிநாசினி பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒருபோதும் மறக்காதீர்கள்.
3.உங்கள் வீட்டில் தையல் இயந்திரம் இருக்கிறதா? உங்களுக்குத் தையல் கலை தெரியுமா? அப்படியென்றால் மாஸ்க் எனப்படும் முகக்கவசம் தைக்கும் வேலையைக் கையில் எடுங்கள். இனி வரும் காலங்களில் முகக்கவசம் இல்லாமல் வெளியே செல்ல முடியாது. வெளியே செல்லவும் கூடாது. எனவே முகக்கவசத்தின் தேவை அதிகம் என்பதால் வீட்டிலேயே அவற்றைத் தயாரித்து விற்பனை செய்யுங்கள். அதுமட்டுமல்லாமல் சுயஉதவிக் குழுக்களுடன் உங்களை இணைத்துக்கொண்டு முகக்கவசங்கள் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை இன்னும் விரிவுபடுத்துங்கள்.
4.முகக்கவசம் போலவே சானிட்டரி நாப்கின்களையும் வீட்டிலேயே தயாரித்து விற்கலாம். வீடுகளில் தயாரிக்கப்படும் ஊதுபத்தி, பினாயில், மூலிகை சோப்பு, மூலிகை ஷாம்பூ போன்ற பொருட்களுக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் என்பதால் இவற்றையும் வீட்டிலேயே தயாரித்து விற்கலாம். அதுமட்டுமல்லாமல் சிறுகுறு கடைகளுக்கும் இவற்றை சப்ளை செய்யலாம்.
5.அதேபோல சானிடைசர் எனப்படும் கிருமிநாசினி தயாரிப்பிலும் ஈடுபடலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து சுய உதவிக் குழுக்களும் கிருமிநாசினி தயாரிப்பில் ஈடுபடுகின்றன. எனவே அவர்கள் உதவியோடு கிருமினாசினியை முறைப்படி தயாரிக்கக் கற்றுக்கொண்டு இதையே உங்கள் தொழிலாகவும் மாற்றலாம்.
6.லாக்டவுன் காலத்தில் உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. ஆனால் பாதுகாப்புக் காரணங்களுக்காக உணவகங்களுக்குச் சென்று பார்சல் வாங்கிவர பலர் தயங்குகிறார்கள். எனவே இப்போதுள்ள சூழ்நிலையில் உணவுத்தொழிலை நீங்கள் கையில் எடுத்தால் அது உங்களுக்கு நிச்சயம் வருமானத்தை அள்ளித் தரும்.
7.பால், தயிர், வெண்ணெய், நெய் போன்ற உணவுப்பொருட்கள் சமையலின் அடிப்படையாக இருக்கின்றன. குறிப்பாக இந்த வெயில் காலத்தில் தயிர், மோரின் தேவை அதிகமாக இருப்பதால் தயிர், மோர் ஆகியவற்றை வீட்டிலேயே தயாரித்து விற்கலாம். வீட்டிலேயே வெண்ணெய் காய்ச்சி நெய் எடுத்தால் அதன் வாசமும், ருசியும் அலாதிதானே? எனவே வீட்டிலேயே நெய் தயாரித்தும் விற்கலாம். “ஹோம் மேட் நெய்” என்றால் கட்டாயம் இல்லத்தரசிகள் போட்டிபோட்டுக்கொண்டு வாங்குவார்கள்.
8.வீட்டிலேயே சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் போன்றவற்றைத் தயாரித்து பார்சல் வழங்கலாம். ராகி புட்டு, கொழுக்கட்டை, பூரணக் கொழுக்கட்டை, போளி, சீயம், போன்ற நம்முடைய பாரம்பரிய உணவுகளைத் தயாரித்து விற்றும் நல்ல லாபம் பார்க்கலாம். இவ்வளவு ஏன்? நீங்கள் வசிக்கின்ற பகுதியில் வயதானவர்கள், குழந்தைகள் அதிகம் இருந்தால் மாலைநேரத்தில் கொண்டைக்கடலை சுண்டல், தட்டைப்பயிறு சுண்டல், வேர்க்கடலை சுண்டல், பட்டாணி சுண்டல் என்று தினமும் ஒரு சுண்டல் வகையைத் தயாரித்துக் கொடுத்தும் பணம் சம்பாதிக்கலாம்.
9.நீங்கள் பலகாரங்கள் செய்வதில் மிகுந்த திறமைசாலி என்றால் உங்களது சமையல் நிபுணத்துவம் குறித்து உங்கள் பகுதி மக்களுக்குத் தெரியப்படுத்தலாம். அதன்பின்னர் ஆர்டரின் பேரில் முறுக்கு, அதிரசம், தட்டை போன்ற பலகாரங்களை செய்து அவரவர் வீடுகளுக்கே சென்று வழங்கலாம். புளிக்காய்ச்சல், மாங்காய் ஊறுகாய், சத்துமாவு, சாம்பார் பொடி, ரசப்பொடி போன்றவற்றுக்கு எப்போதுமே மவுசு அதிகம். அதிலும் இப்போது மிக அதிகம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
10. இது கோடைகாலம் என்பதால், மூலிகை சர்பத், ரோஸ் மில்க் போன்றவற்றை சுகாதாரமான முறையில் தயாரித்து விற்பனை செய்யலாம். அதுமட்டுமல்லாமல் இது கொரோனா காலமும்கூட என்பதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் தேனில் ஊறவைத்த நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த இஞ்சி, புரதச்சத்து நிறைந்த பயத்த மாவுருண்டை, வேர்க்கடலை பர்பி, பொட்டுக்கடலை உருண்டை, பாதாம், முந்திரியினால் செய்யப்பட்ட இனிப்புகள் என்று விதவிதமாகச் செய்துகொடுத்தும் காசு பார்க்கலாம்.
11.உங்கள் வீட்டில் தோட்டம் அல்லது மாடித்தோட்டம் உண்டா? அப்படியென்றால் இனிமேல் கொஞ்சம் மெனக்கெடுங்கள். குறுகிய காலத்தில் அறுவடை ஆகும் கீரைகளை, காய்கறிகளைப் பயிரிட்டு வளர்த்து வாருங்கள். எந்தவித செயற்கை உரமும் இல்லாமல் இயற்கையாக விளையும் காய்கறிகள், கீரைகள் பொன்னைவிட உயர்ந்தவை. எனவே இவைபோன்ற ஆர்கானிக் கீரைகள் மற்றும் காய்கறிகளை உங்களிடமிருந்து மக்கள் விரும்பி வாங்க ஆரம்பிப்பார்கள். உங்களுக்கும் தொடர்ந்து வருமானம் கிடைக்கும்.
12.இந்த லாக் டவுன் காலத்தில் குழந்தைகளை சமாளிப்பது என்பது சாமானியக் காரியமல்ல. எனவே குழந்தைகளை ஆன்லைன் வகுப்புகளில் சேர்க்க பெற்றோர் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதைப் பயன்படுத்தியும் உங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளலாம். நீங்கள் முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றவர் எனில் ஆன்லைனில் சங்கீத வகுப்புகள் எடுக்கலாம். வீணை கற்றுக் கொடுக்கலாம். ஆன்லைன் ஸ்லோக வகுப்புகள் நடத்தலாம்.
13. நீங்கள் கைவினைப் பொருட்கள் தயாரிப்பதில் வல்லவர், அதிலும் வீணாகும் பொருட்களிலிருந்து பயனுள்ள பொருட்களைத் தயாரிப்பதில் கில்லாடி என்றால் இதையே மையமாக வைத்து குழந்தைகளுக்கான கைவினைப்பொருட்கள் கற்றுக்கொடுக்கும் ஆன்லைன் வகுப்புக்களைத் தொடங்கலாம்.
14.அதேபோல நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் தெரிந்தவராக இருப்பின் மொழி சார்ந்த வகுப்புகளை எடுக்கலாம். உதாரணத்திற்கு ஆங்கில மொழியில் நீங்கள் ஆழ்ந்த புலமை கொண்டவர் என்றால் ஆங்கிலம் எழுத, பேசப் பயிற்சி கொடுக்கும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி உங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளலாம்.