சென்னை மெரீனா கடற்கரைக்குச் சென்று ”சுந்தரி அக்கா கடை எங்கிருக்கிறது?” என்று கேட்டால் சிறுகுழந்தை கூட வழிகாட்டும். அந்த அளவுக்கு மெரினாவின் தனித்த அடையாளமாக இருக்கிறார் சுந்தரி அக்கா. ’யார் அவர்?’ என்று புருவம் உயர்த்துகிறவர்களுக்காக அவரைப் பற்றிய ஒரு அறிமுகம்…
சுந்தரி, சென்னை மெரீனா கடற்கரையில் தள்ளுவண்டி உணவகம் நடத்துகிறவர். மீன்,இறால் ,மட்டன் போன்ற அசைவ உணவுகள் இவரது கைப்பக்குவத்தில் தயாராகி பட்டையைக் கிளப்புகின்றன.
காற்று வாங்க மெரினாவுக்கு வருகிறவர்கள் ஒரு சாரர் என்றால் அவரது கைமணத்தில் தயாரான அசைவ உணவுகளை ஒரு கை பார்ப்பதற்காகவே கடற்கரைக்கு வருவோர் மற்றொரு சாரார். அந்த அளவுக்கு இவர் தயாரிக்கும் அசைவ வகைகளில் உப்பு, புளி, காரம் எல்லாமே அளந்து போட்டது போல மிகத் திட்டமாக, அற்புத சுவையுடன் இருக்கிறது.
தள்ளுவண்டிக் கடை உணவுகளின் சுத்தம் சுகாதாரம் என்பது பல இடங்களில் சற்று கேள்விக்குறியாக இருக்கும். ஆனால் அதிலும் அக்கா கடை அசத்துகிறது. தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடமிருந்து “பாதுகாப்பான உணவை வழங்குவதற்கான” அங்கீகாரச் சான்றிதழ் இவரது கடைக்குக் கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல மிகவும் தரமான வீதி உணவகம் என்கிற பெருமையையும் இவர் தயாரிக்கும் உணவுகள் பெற்றுத் தந்திருக்கின்றன.
ஒரு பரபர மாலைப்பொழுதில் சுந்தரி அக்காவை (நாமும் அப்படியே அழைப்போம்!) அவரது கடையில் சந்தித்தேன். தான் அடைந்த புகழ் குறித்த எவ்வித பெருமித உணர்வே இல்லாமல், வாடிக்கையாளர்களை கவனித்தவாறே என்னிடம் இயல்பாகப் பேச ஆரம்பித்தார்.
“என்னுடைய சொந்த ஊர் புதுச்சேரி. அங்கேதான் நான் பிறந்து வளர்ந்தேன். என்னுடைய அப்பா தவறியபிறகு 1978-ல் நான் சென்னைக்கு வந்து என்னுடைய பெரியம்மா வீட்டில் சிலகாலம் தங்கினேன். அதன்பிறகு எனது பெரியம்மாவின் நாத்தனார் மகனைத் திருமணம் செய்து சென்னைவாசியாக மாறினேன்.
எனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் என்னுடைய கணவர் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தார். அதிலிருந்து வந்த வருமானம் மட்டும் குடும்பம் நடத்தப் போதவில்லை. அதுமட்டுமல்லாமல் ஆசைப்பட்டபோது கடைகளில் வாங்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் டிபன் வகைகளின் சுவை அவ்வளவு சிறப்பாக இல்லை.
எனக்கு நன்றாகச் சமைக்க வரும் என்பதால் குடும்ப வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டும், சுவையான உணவுகளை என் குழந்தைகளைப் போல மற்ற குழந்தைகளும் சாப்பிடவேண்டும் என்கிற எண்ணத்தின் பொருட்டும் நான் வசித்த வீட்டின் வாசலிலேயே இட்லி, தோசை, ஆப்பம், புட்டு, பாயசம் ஆகியவற்றை செய்து விற்க ஆரம்பித்தேன். அதில் வரும் வருமானத்தை வைத்து பிள்ளைகளைப் படிக்க வைக்க ஆரம்பித்தேன்.
இந்த நிலையில் நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் வீட்டின் வாசலில் கடைபோடக் கூடாது என்று சொல்லிவிட்டர். எனவே, சட்டென்று அந்த வருமானம் நின்றுபோனது. குடும்பத்தை ஓட்ட மிகுந்த சிரமப்பட்டேன் ” என்பவர் தன் தோழி மூலம் மெரினா கடற்கரை தனக்கு அறிமுகமானதாகக் கூறுகிறார்.
அதில் வரும் வருமானத்தை வைத்து பிள்ளைகளைப் படிக்க வைக்க ஆரம்பித்தேன். இந்த நிலையில் நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் வீட்டின் வாசலில் கடைபோடக் கூடாது என்று சொல்லிவிட்டர். எனவே, சட்டென்று அந்த வருமானம் நின்றுபோனது. குடும்பத்தை ஓட்ட மிகுந்த சிரமப்பட்டேன் ” என்பவர் தன் தோழி மூலம் மெரினா கடற்கரை தனக்கு அறிமுகமானதாகக் கூறுகிறார்.
“என்னுடைய தோழி அப்போது மெரினா கடற்கரையில் கடை போட்டிருந்தாள். அவளின் ஆலோசனையின் பேரில் 2000-ம் ஆண்டில் இட்லி, தோசை, சட்னி, சாம்பார், வடகறி, முட்டைதோசை, மெதுபோண்டா போன்றவற்றை வீட்டிலேயே தயார்செய்து பொட்டலங்களாகக் கட்டி பீச்சில் இருந்த கடைகளுக்கு சப்ளை செய்ய ஆரம்பித்தேன்.ஆரம்பத்தில் பத்து இருபது பொட்டலங்கள் மட்டுமே போட்ட நான் அதன்பிறகு நான் செய்த உணவின் சுவையாலும்,தரத்தாலும் ஒருநாளைக்கு முந்நூறு பொட்டலங்களை சப்ளை செய்யும் அளவுக்கு வளர்ந்தேன். ஆனால் ஒரே ஆளாக முந்நூறு பொட்டலங்களை சப்ளை செய்வது சற்று சிரமமமானதாக இருந்தது.
இந்நிலையில் மெரினாவில் குளிர்பானங்கள் விற்றுக்கொண்டிருந்த தம்பி ஒருவர் “அக்கா நீங்க ஏன் இப்படிக் கஷ்டப்படுறீங்க….பேசாம நீங்களே இங்க ஒரு கடை போடலாம்தானே!” என்று ஆலோசனை கொடுத்தார். எனக்கும் அதுதான் சரியெனப்பட்டது.
முறையான அனுமதி பெற்று பத்தொன்பது வருடங்களுக்கு முன்னால் இதே இடத்தில் இந்தத் தள்ளுவண்டிக்கடையை ஆரம்பித்தேன்” என்கிறவர் ஆரம்பத்தில் தன கணவருடன் சேர்ந்து டிபன் கடையாக மட்டும் அதை நடத்தி வந்திருக்கிறார்.
பிறகு மெல்ல மெல்ல அசைவ மதிய உணவை அறிமுகம் செய்திருக்கிறார். இவைதவிர, விழாக்கள்,பல்வேறு அமைப்புகள் சார்பில் நடைபெறும் கூட்டங்கள் போன்றவற்றுக்காகவும் ஆர்டரின் பேரில் அசைவ உணவுகளைத் தயாரித்துக் கொடுத்திருக்கிறார்.
எல்லாம் சரி,இவரது கடைக்கு சுந்தரி அக்கா கடை என்கிற பெயர் எப்படி வந்தது? அவரிடமே கேட்போம்.
“பைபிளில் வருகின்ற ஒரு புனிதச் சொல் ’கானாவூர்’. எனவேதான் இந்த உணவகத்திற்கு ’கானாவூர் உணவகம்’ என்று பெயர் வைத்தேன்.
ஆனால் என் கடையின் வாடிக்கையாளர்களான பிரதீப், பாலு ஆகிய இருவரும்தான் இந்தக் கடைக்கு சுந்தரி அக்கா கடை என்கிற பெயரை வைத்தார்கள். பிரதீப், பாலு ஆகிய இருவரும் உணவுப் பிரியர்கள். ஊர் ஊராகச் சென்று நல்ல உணவைத் தேடி உண்பவர்கள்.
அப்படி எங்கள் கடைக்கு வந்து தினம்தினம் வகைவகையான மீன் உணவைச் சாப்பிட்டு அதன் ருசியில் ஈர்க்கப்பட்டார்கள். தங்கள் நண்பர்களிடம் “இங்க சுந்தரி அக்கா கடை ஒன்னு இருக்குது. சாப்பாடு சூப்பர்” என்று சொல்ல ஆரம்பிக்க, அந்தப் பெயர் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாக ஆரம்பித்தது.
ஒரு கட்டத்தில் அவர்களே “சுந்தரி அக்கா கடை “ என்கிற பதாகையைத் தயாரித்து இங்கே மாட்டிவிட்டார்கள். கானாவூர் உணவகம் என்கிற பெயர் போர்டில் இருக்கிறது. ஆனால் சுந்தரி அக்கா கடை என்கிற பெயர் தற்போது நிரந்தரமாகிவிட்டது” என்கிறார். உணவு தயாரிக்கத் தேவையான பொருட்களை வாங்குவதில் மிகுந்த அக்கறை காட்டுகிறார் சுந்தரி அக்கா.
“என்னுடைய உணவகத்திற்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் நானே கடைகளுக்கு நேரில் சென்று வாங்குகிறேன். முதல் தரமான மீன், மிளகாய், புளி, மிளகு, சீரகம், மசாலாப் பொருட்கள் என்று ஒவ்வொன்றையும் அதீத கவனத்துடன் தேர்வு செய்கிறேன்.
அதேபோல, தரமான கடலை எண்ணெயில்தான் சமைக்கிறேன். இவ்வளவு ஏன், தக்காளி போன்ற காய்கறிகளையும் அன்றன்றைக்கு தான் வாங்குகிறேன். அவற்றின் விலை நாளை ஏறிவிடும் என்றால்கூட இன்றே நான் மொத்தமாக வாங்கிவைக்க மாட்டேன். தினம்தினம் மீன், தக்காளி போன்றவற்றை பிரெஷ்ஷாக வாங்கி சமைப்பேன்” என்பவர் உணவின் தரத்தில் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டேன் என்கிறார்.
“நான் உணவு விஷயத்தில் மிகவும் கறாரான ஆள். உணவின் சுவை,தரம் ஆகிய இரண்டும் சரியாக இல்லையென்றால் நான் அதை சமரசம் செய்துகொண்டு சாப்பிடமாட்டேன். என்னைப்போலவே வாடிக்கையாளர்களையும் நினைக்கிறேன். என்னை நம்பி வரும் அவர்கள் ருசித்து அனுபவித்து அந்த உணவை சாப்பிடவேண்டுமே தவிர சமரசம் செய்து வேண்டா வெறுப்பாக சாப்பிடக் கூடாது என்பதில் நான் கூடுதல் கவனத்துடன் இருக்கிறேன்.
எடுத்துக்காட்டாக, முதல் தரமான(FIRST QUALITY) மீனை அதிக விலை கொடுத்து ஒரு கிலோ வாங்குகிறேன் என்றால் தலை,வாலைக் கழித்துவிட்டு மீதமுள்ள பாகத்தை வாடிக்கையாளர்கள் வயிறார சாப்பிடவேண்டும் என்கிற நோக்கத்தில் ஐந்து துண்டுகளாக மட்டும்தான் நறுக்குவேன். துண்டுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி லாபம் பார்க்க நான் நினைத்ததே இல்லை.
உணவைப் போலவே உணவு தயாரிக்கப் பயன்படுத்தும் பாத்திரங்களையும் மிகச் சுத்தமாகத் துலக்கிய பிறகே பயன்படுத்துகிறோம். வாடிக்கையாளர்கள் சாப்பிடும் இடங்கள்,வாடிக்கையாளர்கள் அமரப் பயன்படுத்தும் நாற்காலிகளைக்கூட தினமும் துடைத்து சுத்தமாக வைப்போம். சமையல் எண்ணெய் வைத்திருக்கும் பாத்திரங்களைக் கூட நன்கு தேய்த்துக் கழுவியே தினம்தினம் பயன்படுத்துவோம்.
அதனால்தான் சென்னையைத் தாண்டி ஈரோடு, திருச்சி, மதுரை, கோவை என்று வெளியூர்க்காரர்களும் எங்களது உணவுக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். இவர்கள் அவ்வப்போது தொலைபேசியில் அழைத்து தங்களது அன்பையும்,நன்றியையும் வெளிப்படுத்துவதுண்டு.
உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாட்டு மக்களும் எங்கள் கடையைத் தேடி வருகின்றனர். முன்பெல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைவழிபாடு செய்யவேண்டும் என்பதற்காக எங்கள் கடைக்கு விடுமுறை விட்டிருந்தோம்.
நியூசிலாந்து, அமெரிக்கா, லண்டன், துபாய், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் “உங்கள் கடையில் சாப்பிட வேண்டும் என்பதற்காகவும் சென்னைக்கு வந்தோம்” என்று சொல்வார்கள்
குறிப்பாக மருத்துவ சிகிச்சைக்காக உறவுகளை அழைத்துக்கொண்டு வரும் வெளிநாட்டினர் நட்சத்திர உணவகத்தில் தங்கிக்கொண்டு எங்கள் கடைக்கு வந்து சாப்பிட்டுவிட்டுச் செல்வார்கள். எனவே இவர்களை ஏமாற்றிவிடக்கூடாது என்கிற நோக்கத்தில்தான் ஞாயிற்றுக்கிழமையும் நாங்கள் கடையை நடத்த ஆரம்பித்தோம்.
இந்தத் தொழிலில் பெரிதாகப் பணம் பார்த்து வீடு,கார் என்று வாழ நான் ஆசைப்பட்டதேயில்லை. நண்பகல் 12:30 மணி முதல் இரவு ஒன்பதரை மணி வரை என் கடையை நம்பி வருகிறவர்களுக்கு ருசியான உணவளித்து அவர்களின் பசியைப் போக்குகிறேன். இதையே நான் சேர்த்த பெரும் சொத்தாக நினைக்கிறேன்” என்கிறார் இவர்.
அதுமட்டுமல்ல…. உணவுத் தொழிலில் ஈடுபட நினைப்பவர்களுக்கு இவர் தரும் அனுபவப் பாடம் ஐ.ஐ.எம்மில் கூடக் கிடைக்காத ஒன்று.
“நூறு ரூபாய் முதலீடு செய்தால், அதிலிருந்து நூறு ரூபாய் லாபம் பார்க்கவேண்டும் என்பதே தொழில் முனைவோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் உணவுத் தொழிலில் அதுபோன்ற எதிர்பார்ப்பு கூடவே கூடாது. ஐநூறு ரூபாய் முதலீடு செய்து அதில் நூறு ரூபாய் லாபம் பார்க்க நினைப்பதே சரியானது. அப்படி நினைத்துவிட்டால் போதும் நம் தொழில் ஒருநாளும் சரிவடையாது.
சாப்பிடுகிற தொழிலில் நிறைய லாபத்தை எதிர்பார்த்தால் நல்ல உணவைக் கொடுக்க முடியாது என்பது என் எண்ணம். அதேபோல ஒரு உணவை நான் நூறு ரூபாய்க்கு விற்கிறேன் என்றால் அந்த உணவின் மதிப்பு குறைந்தபட்சம் எண்பது ரூபாயாகவாவது இருக்கவேண்டும். அப்போதுதான் அதை நூறு ரூபாய்க்கு விற்பது சரியாக இருக்கும்.
அதைவிட்டுவிட்டு வெறும் ஐம்பது ரூபாய் மதிப்புள்ள பொருளை நூறு ரூபாய்க்கு விற்றால் இரண்டு மூன்று நாளைக்கு மேல் யாரும் திரும்ப என் கடைக்கு வரமாட்டார்கள். இவ்வளவு ரூபாய் கொடுத்து இங்கு ஏன் வரவேண்டும்?எதவாது பெரிய ஹோட்டலுக்குப் போகலாம் என்று நினைத்துவிடுவார்கள்.
ரோட்டுக் கடையில் ஒரு லிட்டர் எண்ணெய் ரூ.55க்கு விற்கிறது என்றால்,உங்கள் தெருவிலேயே நீங்கள் அதே தரத்திலான எண்ணெயை ஐம்பத்தியேழு ரூபாய்க்கு விற்றீர்கள் என்றால் ’இரண்டு ரூபாய்தானே அதிகம். இங்கேயே இதை வாங்கிக் கொள்ளலாம்’ என்று நினைத்து உங்களிடமே வாங்குவர். பத்து லிட்டர் எண்ணெய் விற்கவேண்டிய இடத்தில ஐம்பது லிட்டர் விற்பனையாகும்.`
இதுவே ஒரு லிட்டர் எண்ணெயை ரோட்டுக் கடை விலையைவிட பதினைந்து ரூபாய் அதிகமாக வைத்து விற்றால் ஒரு லிட்டருக்கு பதினைந்து ரூபாய் அதிகமாகக் கிடைத்தாலும் அதிக எண்ணெய் விற்பனையாகாது. ஏனென்றால் அதிக விலைகொடுத்து இங்கே வாங்குவதைவிட கொஞ்சம் மெனக்கெட்டால் மிகக் குறைந்த விலையில் எண்ணெய் வாங்கலாமே என்று நினைத்து ரோட்டுக் கடைக்குப் போய்விடுவர்.
எனவே லாபத்தை அதிகமாகப் பார்க்க நினைத்தால் விற்பனை மந்தமாகிவிடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இதுதான் தொழிலை மேம்படுத்துவதற்கான அடிப்படை சூட்சுமம்” என்கிறார் சுந்தரி அக்கா.
இப்படித் தொழிலில் கில்லியாக இருக்கும் இவர் மறுபக்கம் தன குடும்பத்தின் மீதும் மிகுந்த பற்று கொண்டவராக இருக்கிறார். குறிப்பாக மறைந்த தனது கணவர் சேகர் மீது மிகுந்த எல்லையற்ற அன்பு வைத்திருக்கிறார். இவரது கடையின் பெயர்ப்பலகையில் சேகர் துணை என்று எழுதபட்டிருப்பதே அதற்கு மிகப் பெரிய சாட்சி.
“குடும்பம்,தொழில் என்று எனக்கு எல்லாவிதத்திலும் பக்கபலமாக இருந்த என் கணவர் 2005-ல் காலமானார். அவரது மறைவு என்னை மிகவும் பாதித்தது. அந்த இழப்பிலிருந்து மீண்டுவர நானே உத்தி ஒன்றை உருவாக்கினேன். அவர் என்னுடன் இருப்பதாகவே நினைத்துக்கொள்ள ஆரம்பித்தேன்.
தினசரி நான் எவ்வளவு ரூபாய் எனக்காக செலவழிக்கிறேனோ அதே அளவுப் பணத்தை அவருக்கு என்று தனியாக எடுத்து வைத்து விடுவேன். எடுத்துக்காட்டாக, எனக்காக சோப்பு, பற்பசை போன்ற பொருள் வாங்கினால் அதே அளவுப் பணத்தை அவருக்காக எடுத்து வைத்து விடுவேன். எனக்குப் புதிய ஆடை எடுத்தால் அவருக்கு புதிய ஆடை எடுக்க ஆகும் பணத்தை எடுத்து வைத்துவிடுவேன்.
நான் எங்கேயாவது ஊருக்குச் சென்றால் அவருக்கான டிக்கட் செலவை தனியாக எடுத்து வைத்துவிடுவேன். இப்படி வருடம் முழுக்க சேரும் பணத்தை அவரது நினைவு நாளன்று எடுத்து அந்த பணத்தின் மதிப்பிற்கான அசைவ உணவுகளைத் தயார் செய்வேன்.
என்னை சுயமரியாதையுடன் வாழவைத்துக் கொண்டிருக்கும் இதே மெரினா கடற்கரை தள்ளுவண்டிக் கடையில் வைத்து ஒவ்வொரு வருடமும் அந்த உணவை மக்களுக்கு இலவசமாக வழங்குகிறேன். இதில் கிடைக்கும் ஆத்மதிருப்தி என்னைத் தொடர்ந்து இயங்கவைத்துக் கொண்டிருக்கிறது” என்று நெகிழ்கிறார் சுந்தரி அக்கா.
ஆம் அக்கா, மனித வாழ்க்கை வெறும் அறிவால் மட்டும் ஆனதல்ல; உணர்வுகளாலும் ஆனது. அதுதான் உலகையே ஆள்கிறது.
– சு.கவிதா
(கூடுதல் தகவலுக்கு: சுந்தரி அக்கா: 091764 35344 )